இந்தியா –அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் பரபரப்பு ; விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால வர்த்தக ஒப்பந்தம் (Trade Pact) நிறைவடையும் தருவாயில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் 'மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்' ஏற்பட்டுள்ளதாக இந்தியத் தரப்பு அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே இழுபறியாக இருந்த வர்த்தக இணக்கப்பாடுகள் தற்போது ஒரு முடிவுக்கு வரும் நிலையில் உள்ளன.

இரு நாடுகளினதும் வர்த்தகப் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பலனாக, பெரும்பாலான சிக்கலான விடயங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் மேலும் இலகுவாக்கப்படும்.
குறிப்பாக தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளில் இரு நாடுகளும் பரஸ்பரம் நன்மையடைய வழிவகுக்கும்.
இந்தியத் தயாரிப்புகளுக்கு அமெரிக்கச் சந்தையில் கூடுதல் வாய்ப்புகளைப் பெறுவதற்கும், அதேபோல அமெரிக்கத் தயாரிப்புகளுக்கு இந்தியச் சந்தையில் வரிச் சலுகைகளை வழங்குவதற்கும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போதைய உலகளாவிய பொருளாதாரச் சூழலில், அமெரிக்காவுடனான இந்த நெருக்கமான வர்த்தக உறவு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் வர்த்தக ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும் இது உதவும். விரைவில் இந்த ஒப்பந்தம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.