பட்டமளிப்பு விழா முடிந்து பாடசாலை திரும்பிய பேருந்து கோர விபத்து! 61 பயணிகளின் நிலை
இந்தோனேஷியாவில் பட்டமளிப்பு விழா முடிந்து பாட்சாலைக்கு திரும்பிக்கொண்டிருந்து மலைப் பகுதியிலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்தோனேஷியா மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்த பாண்டுங் பகுதியில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழா முடிந்ததும் பேருந்து ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜகார்தா பகுதியில் உள்ள உயர்நிலைப் பாடசாலைக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அந்த பேருந்தில் மொத்தம் 61 பேர் பயணம் செய்துள்ளனர்.
மலைகள் நிறைந்த பகுதியில் பேருந்து கீழே இறங்கி கொண்டு இருந்தபோது திடீரென பிரேக் பழுதானதாக கூறப்படுகிறது.
இதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலையில் முன்னால் சென்று கொண்டிருந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 9 பேர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.
இது தொடர்பில் தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 2 பேர் உயிர் இழந்தனர்.
பலியானவர்களில் 9 பேர் மாணவர்கள், ஒரு ஆசிரியர், மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.