பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்ட ஆசிட்! வலியால் துடிதுடித்த பெண்
அமெரிக்கா - பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த 33 வயதான கிறிஸ்டின் என்பவர் குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுக்க முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், பரிசோதனைக்காக கடந்த ஆண்டு (2022) டிசம்பர் 19ஆம் திகதி Main Line fertility என்ற கருவுறுதல் சிகிச்சை மையத்திற்கு கிறிஸ்டின் சென்றுள்ளார்.
அங்கு வைத்தியர் கிறிஸ்டினுக்கு (SHG) என்ற சிகிச்சை முறையை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்காக டியூப் ஒன்றை கர்ப்பப்பைக்குள் செலுத்தி அதன் மூலமாக மருந்தை உள்ளே செலுத்த ஆயத்தமாகி உள்ளார்.
அப்போது தவறுதலாக அந்த சிகிச்சைக்கு தேவையான மருந்ததை விட்டு விட்டு trichloro acetic acid என்ற அமிலத்தை ஊசியில் ஏற்றி கர்ப்பப்பைக்குள் செலுத்தியுள்ளார்.
அந்த பெண் வலியால் துடித்துள்ளார். அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்ட அமிலம் 85 சதவீதம் செறிவுடன் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் கிறிஸ்டியனின் இனப்பெருக்க உறுப்புகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தான் உட்காரும்போது கூட வலியை உணர்வதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் தற்போதைய நிலவரப்படி கிறிஸ்டின் முதல் மற்றும் 2ம் நிலை உள் மற்றும் வெளிப்புற தீக்காயங்களுக்காக உள்ளூர் தீக்காயம் மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும், Main Line fertility மீது நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் இன்னும் தங்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் என்ன நடந்தது என்பதை கூட விளக்கவில்லை என்றும் கிறிஸ்டியனின் வழக்கறிஞர் ராபர்ட் மில்லர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்,
இந்த அமிலத்தால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது என்றும் அதன் நீண்ட கால விளைவுகள் எப்படி இருக்கும் என எங்களுக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
மேலும், IVF சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு ஆசிட் செலுத்தப்பட்ட சம்பவம் தற்போது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.