போர் தொடர்பில் ரஷ்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்யா தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் (Sergei Lavrov) தென்னாப்பிரிக்காவுக்குச் சர்ச்சைக்குரிய பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
ரஷ்ய-உக்ரேன் போரில் தென்னாப்பிரிக்கா நடுநிலையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அடுத்த மாதம், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் 10 நாட்களுக்குக் கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்கின்றன.
அதன்படி நட்பு நாடுகளுடன் அந்தப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தென்னாப்பிரிக்காவின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் தற்காத்துப் பேசியிருக்கிறார்.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான பூசலுக்குத் தீர்வு காணப் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் அழைப்பு விடுத்தார். உக்ரேனுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராய் இருப்பதாக லாவ்ரோவ் குறிப்பிட்டார்.
உக்ரேனும் அதன் நட்பு நாடுகளும், அரசதந்திர வழிமுறைகளிலிருந்து விலகியிருப்பதாக அவர் சாடினார்.
மேலும் உக்ரேனின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதால், ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சு நடத்த முடியாது என்று கீவ் அதிகாரிகள் தெரிவித்தனர்.