அதிகாரத்தை பயன்படுத்தி அரச அதிகாரிகள் மேற்கொண்ட செயல்: சிக்கிய வாகனங்கள்
விஐபிக்களின் கார்களில் சிகப்பு மற்றும் நீல நிற சைரன் பயன்படுத்துவதை கடந்த 2017ம் ஆண்டு ஒன்றிய அரசு தடை செய்தது.
இந்நிலையில் பிரதமருக்கு கூட இல்லாத அதிகாரத்தை பயன்படுத்திய அரசு அதிகாரிகளின் வாகனங்கள் சிக்கியுள்ளன.
குடியரசு தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி ஆகியோரின் கார்களுக்கும் கூட இது பொருந்தும். இந்தியாவில் விஐபி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த அதிரடி முடிவை ஒன்றிய அரசு எடுத்தது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த உத்தரவிற்கு இணங்கியுள்ளன. இதனால் அரசியல்வாதிகள் உள்ளிட்ட விஐபிக்களின் கார்களில் சிகப்பு மற்றும் நீல நிற சைரன்களை பார்ப்பது என்பது தற்போது மிகவும் அரிதான ஒரு விஷயமாக மாறி விட்டது. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் நிலைமை அப்படி இல்லை.
அங்கு இன்னமும் கூட பலர் சிகப்பு மற்றும் நீல நிற சைரன்களை தங்கள் கார்களில் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் இந்த விதிமுறை மீறல் அதிகமாக நடக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக கொல்கத்தா காவல் துறையினர் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
விதிமுறைகளை மீறி கார்களில் பொருத்தப்பட்டுள்ள சிகப்பு மற்றும் நீல நிற சைரன்களை அகற்றுவதற்காக சிறப்பு வாகன தணிக்கையை கொல்கத்தா காவல் துறையினர் மேற்கொண்டனர்.
இந்த அதிரடி நடவடிக்கை கடந்த சனிக்கிழமை தொடங்கியது. அப்போது முதல் புதன் கிழமை வரையிலான 5 நாட்களில், 314 சிகப்பு மற்றும் நீல நிற சைரன்களை காவல் துறையினர் அகற்றியுள்ளனர்.
இது தொடர்பாக கொல்கத்தா போக்குவரத்து காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் சிலர் கூறுகையில், ''பக்ரீத் பண்டிகையின்போது பெரும்பாலான அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினத்தில் கூட 32 அரசாங்க வாகனங்களில் இருந்து சிகப்பு மற்றும் நீல நிற சைரன்களை நாங்கள் அகற்றினோம்.
இந்த வாகனங்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரால் பயன்படுத்தப்பட்டவை ஆகும். இந்த வாகனங்களின் பதிவு எண்களை நாங்கள் குறித்து வைத்துள்ளோம். இந்த அரசு அதிகாரிகளிடம் தற்போது விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே சிகப்பு மற்றும் நீல நிற சைரன்களை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு ஏதாவது சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்காக விளக்கம் கேட்டுள்ளோம். அவர்கள் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து, சட்டத்தின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றனர்.
சிகப்பு மற்றும் நீல நிற சைரன்கள் பொருத்தப்பட்ட கார்கள், தவறான நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது எனவும் கொல்கத்தா போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஏனெனில் சிகப்பு மற்றும் நீல நிற சைரன் பொருத்தப்பட்ட கார்களை நிறுத்துவதற்கு காவல் துறை அதிகாரிகள் சிலர் தயக்கம் காட்டுகின்றனர்.
உள்ளே அமர்ந்திருப்பவர் உயர் அதிகாரியாக இருக்கலாம் என்பதே இதற்கு காரணம். மேலும் போக்குவரத்து சிக்னல்களில் சிகப்பு விளக்கு எரியும்போதும் நிற்காமல் செல்வது போன்ற விதிமுறை மீறல்களில், சிகப்பு மற்றும் நீல நிற சைரன்கள் பொருத்தப்பட்ட கார்கள் ஈடுபடுவதாகவும் கூட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
இதனால் இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் முடிவு கட்டும் நோக்கத்தில்தான், விதிமுறைகளை மீறி சிகப்பு மற்றும் நீல நிற சைரன்கள் பொருத்தப்பட்ட கார்களுக்கு எதிராக கொல்கத்தா போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தற்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் விஐபி கலாச்சாரமும், தவறான பயன்பாடுகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.