ரஷ்யாவுக்கு அடுத்த பேரிடி... அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அதிரடி முடிவு
உக்ரைனில் போர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், ரஷ்யா மீது மேலும் தடைகளை விதிக்க அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் 42 நாட்களாக ரஷ்யாவின் கண்மூடித்தனமான இராணுவ நடவடிக்கைகள் நீடித்து வருகிறது. இர்பின், புச்சா உள்ளிட்ட நகரங்களில் ரஷ்ய துருப்புகள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளதுடன், அப்பாவி பொதுமக்களை சித்திரவதைக்கு உட்படுத்தி, கொடூரமாக கொலை செய்துள்ளதுடன், பெண்கள் மற்றும் சிறார்களை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியுள்ளனர்.
புச்சா நகரின் கொடூரங்கள் அம்பலமான நிலையில், உலக நாடுகள் பல கடுமையாக விமர்சித்துள்ளதுடன், கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மேலதிக நடவடிக்கையாக ரஷ்யாவில் அனைத்து புதிய முதலீடுகளுக்கும் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளன.
மேலும், ரஷ்யாவில் உள்ள நிதி நிறுவனங்கள், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதும் தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளது.
மட்டுமின்றி, ரஷ்யாவுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அதிகாரிகள் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுக்கு இது பேரிடியாக அமையும் என்றே, நிபுணர்கள் தரப்பு கருத்து தெரிவித்துள்ளது.