கனடாவில் இடம்பெறும் நூதன மோசடிகள் குறித்து எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறுவர்களின் பாலியல் ரீதியிலான போலி புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உருவாக்கி, அவர்களிடம் கப்பம் கோரும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகக் கனடாவின் தேசிய தகவல் மையமான சைபர்டிப் எச்சரித்துள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான இணையவழி பாலியல் சுரண்டல்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கான Cybertip.ca தளம் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.
குற்றவாளிகள் சிறுவர்களின் சுயவிவரப் படங்களை மட்டுமே பயன்படுத்தி, AI மூலம் பாலியல் ரீதியிலான போலி "டீப்ஃபேக்" காட்சிகளை உருவாக்கும் ஒரு புதிய போக்கு அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டீப்ஃபேக் என்பது உண்மையானது போல் தோன்றும், ஆனால் AI மூலம் மாற்றியமைக்கப்பட்டு, ஒருவரைப் பாலியல் ரீதியாக அல்லது துஷ்பிரயோகம் செய்யும் வகையில் சித்தரிக்கும் புகைப்படம், காணொளி அல்லது ஒலிப்பதிவுகளாகும் என Cybertip.ca விளக்கியுள்ளது.
முன்னர் குற்றவாளிகள் சிறுவர்களை வற்புறுத்தியோ அல்லது ஏமாற்றியோ அவர்களின் ஆபாசப் படங்களைப் பெற முயன்றனர்.
எனினும், இப்போது அவர்கள் அந்தப் படியைத் தவிர்த்துவிட்டு, AI கருவிகளைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டவர்களின் முக அமைப்பைக் கொண்டு போலி உள்ளடக்கங்களை நேரடியாக உருவாக்கும் நிலைக்கு மாறியுள்ளனர் என்று அந்தத் தகவல் மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல் மையத்தை இயக்கும் 'குழந்தை பாதுகாப்புக்கான கனடிய மையம்' கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில், கனடாவில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் 10 பதின்ம வயதினரில் 9 பேர் தனிப்பட்ட செய்தி அனுப்பும் தளங்கள் வழியிலேயே பாதிப்புக்கு உள்ளாகின்றனர் எனத் தெரியவந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் , டெலிகிராம் , எக்ஸ் (X) மற்றும் டிஸ்கோர்ட் உள்ளிட்ட பிரபல சமூக ஊடகங்கள் மற்றும் செய்திப் பகிர்வுத் தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை வைத்தே இவ்வாறான போலி டீப்ஃபேக்குகள் உருவாக்கப்படுவதாகப் பதின்ம வயதினர் தெரிவித்துள்ளதாக Cybertip.ca கூறியுள்ளது.
பெரியவர்களால் எளிதில் கண்காணிக்க முடியாதவாறு, சிறுவர்கள் தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்ளும் மற்றும் உரையாடும் இணைய இடங்களையே குற்றவாளிகள் இலக்கு வைப்பதாக அந்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான போலிப் புகைப்படங்கள் இணையத்தில் பரவுவதைத் தடுப்பதற்காக, அச்சுறுத்தல்களுக்குப் பயந்து பலர் பணமிரட்டுபவர்களுக்குப் பணம் அனுப்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.