கல்லூரி நுழைவுத் தேர்வில் முறைகேடு ; கல்வி அமைச்சர் இராஜினாமா
கல்லூரி நுழைவுத் தேர்வில் AI முறைகேடு காரணமாக தென் கொரியாவின் கல்வி அமைச்சர் சோய் கியோ-ஜின் தனது பதவியை நேற்று(22) இராஜினாமா செய்துள்ளார்.
அந்நாட்டின் ஜனாதிபதி லீ ஜே மியுங் கல்வி அமைச்சரின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முறைகேடு
தென் கொரியாவின் கல்லூரி நுழைவுத் தேர்வில் (சுனியுங்) செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடந்த முறைகேடு மற்றும் அதனைத் தடுக்க எடுக்கப்பட்ட அவசர நடவடிக்கைகளால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு பொறுப்பேற்று அவர் இராஜினாமா செய்துள்ளார்.
தென் கொரியாவில் கடந்த 15 ஆம் திகதி அன்று, தேசிய வரிக் கணக்காளர் தேர்வில் முதலிடம் பிடித்த நபர்சிறிய கமரா, ஸ்மார்ட்போன் மற்றும் ஏஐ கருவிகளை பயன்படுத்தி முறைகேடு செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, 4 நாட்களில் நடைபெறவிருந்த சுனியுங் எனப்படும் கல்லூரி நுழைவுத் தேர்விலும் இதேபோன்ற தொழில்நுட்ப முறைகேடுகள் நடக்கலாம் என்ற அச்சம் எழுந்தது.
இதையடுத்து கடந்த 19 ஆம் திகதி அன்று தென் கொரியா முழுவதும் 1,312 தேர்வு மையங்களில் சுமார் 5.5 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 'சுனியுங்' தேர்வை எழுதினர். முறைகேடுகளைத் தடுக்க கல்வி அமைச்சகம் கடைசி நேரத்தில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்தது.
இதற்கிடையே, தேர்வு நாளில் அனுமதிக்கப்படாத மின்னணு சாதனங்களை வைத்திருந்ததாக 111 முறைகேடு வழக்குகள் பதிவாகின.
தொழில்நுட்ப முறைகேடுகளை முன்கூட்டியே கணித்து தடுக்கத் தவறியதாலும், அவசரக் கட்டுப்பாடுகளால் மாணவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பொறுப்பேற்றும் கல்வி அமைச்சர், தனது பதவியை இராஜினாமா செய்தார்.