ரொறன்ரோ நகர மத்தியில் கத்திக்குத்து: பெண் ஒருவர் படுகாயம்
கனடாவின் ரொறன்ரோ நகர மத்தியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடிலெய்ட் வீதி மேற்கு மற்றும் ஸ்படைனா அவென்யூ ஆகிய பகுதிகளுக்கு அருகே இரவு 8.45 மணியளவில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகத் தமக்குத் தகவல் கிடைத்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள், கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் இருந்த பெண்ணொருவரை மீட்டுள்ளனர்.

ரொறன்ரோ அவசர மருத்துவச் சேவைப் பிரிவினரின் தகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு உள்ளூர் விபத்துச் சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
கத்திக்குத்துச் சம்பவத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவராத நிலையில், ரொறன்ரோ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.