திரைப்படத் துறைக்கு அச்சுறுத்தலாகும் செயற்கை நுண்ணறிவு – கனடிய பேராசிரியர் எச்சரிக்கை
ஹாலிவுட் மற்றும் உலக திரைப்படத்துறைக்கு செயற்கை நுண்ணறிவு (AI) “மிகப் பெரிய அச்சுறுத்தல்” என கனடாவின் மாணிட்டோபா பல்கலைக்கழக திரைப்பட ஆய்வு பேராசிரியர் பிரெண்டா ஆஸ்டின்-ஸ்மித் எச்சரித்துள்ளார்.
“திரைப்படத் துறையில் தொழிலாளர் நிலையைப் பொருத்தவரை இது ஒரு பேரழிவு,” என அவர் தெரிவித்தார்.
அவரது கருத்து, நெதர்லாந்து தயாரிப்பாளர் மற்றும் நகைச்சுவையாளர் எலின் வான் டெர் வெல்டன் உருவாக்கிய டில்லி நார்வுட் என்ற செயற்கை நுண்ணறிவு நடிகை அறிமுகமானதைத் தொடர்ந்து வந்துள்ளது.
ஹாலிவுட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு நடிகையாக வர்ணிக்கப்படும் டில்லி நார்வுட் பல்வேறு தொழிற்சங்கங்கள், நடிகர்கள், மற்றும் இயக்குநர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளார்.
“அவளை ஒரு நடிகையாக அழைப்பதை நான் மறுக்கிறேன். அது ஒரு ‘பாட்’, ஒரு கணிப்பு சார்ந்த காட்சித் தொழில்நுட்பம் மட்டுமே,” என பிரெண்டா ஆஸ்டின்-ஸ்மித் என தெரிவித்துள்ளார்.
“திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு கவர்ச்சியான விருப்பம். சம்பளம், உணவு, வசதி எதுவும் தேவையில்லை. இது புகார் சொல்லாது, வானிலை பற்றி கவலைப்படாது,” என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இது திரைப்படக் கலைஞா்களுக்கு பெரும் சவாலையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாணிட்டோபா மாநிலத்தின் திரைப்படத் துறையிலும் இதன் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு குறித்து அவர் கூறியுள்ளார்.
“அது பார்வையாளர்களின் விருப்பத்துக்கு அமைந்தே தீர்மானிக்கப்படும். காலமே சொல்லும்,” என பேராசிரியர் ஆஸ்டின்-ஸ்மித் கூறினார்.