எயார் கனடா விமானப் பணியாளர்கள் சம்பள ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளனர்
கனடாவின் முதனிலை விமான சேவை நிறுவனமான எயார் கனடா விமானப் பணியாளர்கள், நிறுவனத்தின் புதிய சம்பள ஒப்பந்தத் திட்டத்தை பெரும்பான்மை வாக்குகளால் நிராகரித்துள்ளனர்.
சனிக்கிழமை மாலை 3 மணிக்கு முடிவடைந்த வாக்கெடுப்பில், 99.1% பணியாளர்கள் சம்பள உயர்வு குறித்த விமான சேவை நிறுவனம் முன்வைத்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்தனர்.
சம்பளப் பிரச்சினை குறித்து இரு தரப்பும் முன்பே சமரசம் (mediation) செய்ய ஒப்பந்தம் செய்திருந்ததாகவும், அதில் முடிவு வராவிட்டால் நியாயத் தீர்ப்பு (arbitration) முறையில் தீர்வு காணப்படும் எனவும் எயார் கனடா கூறியுள்ளது.
மேலும், வேலைநிறுத்தம் அல்லது பூட்டுதல் எதுவும் நடைபெறாது, எனவே விமான சேவைகள் வழக்கம்போல் தொடரும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த அந்த இடைக்கால ஒப்பந்தத்தில், பணியாளர்களுக்கு இந்த ஆண்டு 12% (புதிய பணியாளர்கள்) மற்றும் 8% (மூத்த பணியாளர்கள்) சம்பள உயர்வு வழங்கப்படும் என முன்மொழியப்பட்டது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறிய அளவிலான உயர்வுகள் இடம்பெறும் எனவும் திட்டமிடப்பட்டிருந்தது. விமானம் தரையிறங்கிய நேரங்களில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும் விதிமுறையும் அதில் இடம் பெற்றிருந்தது.
மூன்று நாள் வேலைநிறுத்தம் ஆகஸ்ட் 19 அன்று மத்திய அரசின் நடுவர் உதவியுடன் முடிவுக்கு வந்தது.
இந்த பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசு நடுநிலையைக் காக்கவில்லை; மாறாக எயார் கனடாவுக்கு ஆதரவாக செயற்பட்டதாக தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.