கனடாவில் 400 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
கனடாவில் சுமார் 400 பயணிகளுடன் பிரான்சின் பாரிஸ் நோக்கி பயணித்த விமானம் ஒன்று புறப்பட்டு சில நிமிடங்களில் மீண்டும் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டுள்ளது.
விமானத்தின் எஞ்சின் ஒன்றில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இவ்வாறு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
டொரன்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் ஒன்று இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ள காரணத்தினால் குறித்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் வேறும் விமானம் ஒன்றின் மூலம் பயணிக்க உள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயந்திரக் கோளாறுக்கு உள்ளான விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
இரவு 8.46 மணிக்கு புறப்பட்ட விமானம் இரவு 9.50 மணிக்கு மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில் பயணிகள் எவரும் காயம் அடையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.