அரசாங்கத்தின் உதவியை நாடும் எயார் கனடா
கனடாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான எயார் கனடா நிறுவனம் தொழிற்சங்க பிணக்கு தொடர்பில் அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளது.
விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து விமானிகள் எயார் கனடா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பணிப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே இரண்டு தரப்புகளுக்கும் இடையில் அரசாங்கம் மத்தியஸ்தம் வகித்து பிணக்குகளை தீர்க்க உதவ வேண்டும் என எயார் கனடா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தப் பிரச்சனையை இரு தரப்புக்களும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பயணிகள் பாதிக்கப்படுவர் என எயார் கனடா விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே அரசாங்கம் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என எயார் கனடா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விமானிகள் நியாயமற்ற வகையில் சம்பள அதிகரிப்பு கோரிக்கையை முன்வைத்து வருவதாக விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
எயார் கனடா விமான சேவையில் சுமார் 5200 விமானிகள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.