எயார் கனடா விமான சேவை ஸ்தம்பிதம்
கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான எயார் கனடா நிறுவனத்தின் விமான சேவைகள் முழு அளவில் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
விமான சேவை நிறுவனத்தின் 10,000-க்கும் மேற்பட்ட விமானப் பணியாளர்கள் இன்று அதிகாலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால், உலகளவில் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒப்பந்தம் எட்டப்படாததால் வேலைநிறுத்தம் தொடங்கியதாக கனேடிய பொது ஊழியர் தொழிற்சங்கத்தின் (CUPE) பேச்சாளர் ஹக் பவுலியோட், உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து, விமான நிறுவனம் தனது விமானப் போக்குவரத்து சேவைகளை நிறுத்துவதாக அறிவித்தது.
இதேவேளை, எயார் கனடா, பணியாளர்களை விமான நிலையங்களில் இருந்து தடுக்கும் “லாக்அவுட்” உத்தியை அறிவித்தது.
இந்த நிறுத்தம் தினமும் 130,000 பயணிகளை பாதிக்கும், இதில் 25,000 கனடியர்கள் வெளிநாடுகளில் பாதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக அடிப்படையில் இணக்கப்பாடு எட்டப்பட்டாலும், முழு செயல்பாடுகளை மீண்டும் தொடங்க ஒரு வாரம் ஆகலாம் என எயார் கனடாவின் தலைமை இயக்க அதிகாரி மார்க் நாஸ்ர் தெரிவித்தார்.