கனடாவில் பெரும் அதிர்வலை ; விமானம் கடத்தப்பட்டதால் முடங்கிய விமான சேவை
கனடாவில் சிறிய ரக விமானமொன்று கடத்தப்பட்டதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து கனடாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான வென்கூவர் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகள் நேற்று (15) தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
வென்கூவர் - விக்டோரியா பகுதியில் செயல்படும் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய செஸ்னா வகை விமானமொன்று, கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கனடாவின் ராயல் மவுண்டட் பொலிஸாருக்கு நேற்று பிற்பகல் 1.10 மணியளவில் தகவல் வழங்கப்பட்டது.
கனடாவில் அரிதான கடத்தல் சம்பவங்கள்
விமானம் வென்கூவர் அனைத்துலக விமான நிலையம் நோக்கி பறந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளை அந்த விமானத்தில் சந்தேக நபர் ஒருவர் மட்டுமே இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிற்பகல் 1.45 மணியளவில் குறித்த விமானம் வென்கூவரில் தரையிறங்கியதும், அதிலிருந்த ஒரே பயணியாகக் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
அரசாங்க ஊடகமான CBC வெளியிட்ட புகைப்படங்களில், தரையிறங்கிய செஸ்னா விமானத்தை பாதுகாப்பு வாகனங்கள் முற்றுகையிட்டதைக் காணலாம். குறித்த விமானம் விக்டோரியாவில் உள்ள ஒரு விமான மன்றத்தின் நிர்வாகத்தில் செயல்பட்டு வந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தால், வென்கூவர் விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், 9 உள்நாட்டு விமானங்கள் மாற்றுத் திசைகளுக்கு திருப்பிவிடப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை கனடாவில் கடத்தல் சம்பவங்கள் மிகவும் அபூர்வமாகவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.