வானூர்திகளின் பயணக் கட்டணங்கள் பெருமளவில் அதிகரிப்பு
ஹோர்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக அதிகரித்து வரும் எரிபொருள் செலவினங்களால், தற்போது சேவையில் உள்ள வானூர்திகளின் பயணக் கட்டணங்கள் வழக்கத்தை விட மிக அதிகளவில் காணப்படுகின்றன.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான முறுகலால் ஹோர்முஸ் நீரிணை முடக்கம் 10வது வாரத்தை நெருங்கி வரும் நிலையில், உயர்ந்த மசகு எண்ணெய் விலையானது உலகளாவிய வானூர்திப் பயணத் துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

80 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ள வானூர்தி எரிபொருள்
வானூர்தி எரிபொருள் விலையானது, பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான போரைத் தொடங்கியதிலிருந்து 80 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
வானூர்தி எரிபொருள் விலை உயர்வு காரணமாக வானூர்தி நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தவும், பயணங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் அல்லது இரண்டையும் செயற்படுத்தவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளன.
சிரியம் (Cirium) என்ற வானூர்திப் போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனத்தின் தரவுகளின்படி, அமெரிக்கா, சீனா, ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதி உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலப்பகுதியில் 9.3 மில்லியன் இருக்கைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில், டுபாய் மற்றும் தோஹா போன்ற முக்கிய வானூர்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள வான்வெளிப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரிய அளவிலான இருக்கைக் குறைப்புகள் செய்யப்பட்டுள்ளன.
கட்டார் ஏர்வேஸ் மட்டும் ஜூன் முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் 2 மில்லியன் இருக்கைகளுக்கு இணையான வானூர்திகளை ரத்து செய்துள்ளது.