கனடாவில் மருந்தாளரின் தகாத செயல்
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள பாசானோ நகரில், நோயாளி மற்றும் ஊழியர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மருந்தாளுநர் ஒருவரின் உரிமத்தை ஆல்பர்ட்டா கல்லூரி ஆஃப் பார்மசி நிரந்தரமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பாசானோ நகரில் மருந்தகம் நடத்தி வந்த அன்கித் பாரிக் என்பவர், அங்கு பணிபுரிந்த மற்றும் மருந்தகத்திற்கு வந்த நோயாளிகளான பெண்களிடம் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தவறான பாலியல் நடத்தைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதுமட்டுமின்றி, மருந்தகம் திறந்திருந்த நேரத்திலும், தான் பணியில் இருந்த பொறுப்பான நேரங்களிலும் பாரிக் மருந்தக வளாகத்திலேயே தொடர்ந்து மது அருந்தியதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பாரிக்கின் உரிமத்தை ரத்து செய்ய விசாரணை தீர்ப்பாயம் 2024-லேயே முடிவெடுத்தது. இந்த முடிவை எதிர்த்து பாரிக் மேல்முறையீடு செய்த நிலையில், மேல்முறையீட்டு குழு அதனைத் தள்ளுபடி செய்து, அவராலேயே ஏற்பட்ட மேல்முறையீட்டுச் செலவுகளையும் அவரே ஏற்குமாறு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, பாரிக் ஆல்பர்ட்டா மேல்முறையீட்டு நீதிமன்றத்தை (Alberta Court of Appeal) நாடினார்.
ஆனால், கடந்த ஜூன் 23 அன்று நீதிமன்றமும் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து, அவர் செலுத்த வேண்டிய நீதிமன்றச் செலவை மட்டும் சற்றே குறைத்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் மூலம் அன்கித் பாரிக் இனி மருந்தாளுநராகப் பணியாற்ற முடியாது. மேலும், அவர் தனது உரிமத்தை மீண்டும் கோரி விண்ணப்பிக்கவும் தகுதி அற்றவர் ஆக்கப்பட்டுள்ளார்.