ஈரான் உச்சதலைவர் கமேனி கொல்லப்பட்டாரா? அமைச்சரின் பதிலால் வலுக்கும் சந்தேகம்
அணுசக்தி போட்டியின் காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இன்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. தெற்கு ஈரானில் பெண் குழந்தைகள் பயிலும் ஆரம்ப பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 57 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

கமேனி இன்னும் உயிருடன் இருக்கிறார்...
தெஹ்ரானில் ஈரான் உச்சதலைவர் அயத்துல்லா காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தை குறிவைத்தும் தாக்குதல் நடந்துள்ளது. அவர் ஏற்கனவே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில் கமேனியின் நிலை குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அளித்த பேட்டியில் "எனக்குத் தெரிந்தவரை கமேனி இன்னும் உயிருடன் இருக்கிறார்" கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பாஸ் அரக்சியின் நிச்சயமற்ற பதிலால் கமேனியின் நிலை குறித்த சந்தேகங்கள் வலுத்துள்ளன.
அதேநேரம், தனது சமூக வலைதள பக்கத்தில், "தெற்கு ஈரானில் உள்ள பள்ளி பட்டப்பகலில் தாக்கப்பட்டது. அப்பாவி குழந்தைகள் இறந்தனர். இதற்கு பதில் கிடைக்காமல் போகாது" என்று சேதமடைந்த பள்ளியின் படத்தை பகிர்ந்து அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.