அமெரிக்கா பாலத்தை தகர்த்த கப்பலில் பணிபுரிந்த 22 பேரும் இந்தியர்கள்
அமெரிக்காவில் கப்பல் ஒன்று மோதி இரும்பு பாலம் நொறுங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தக் கப்பலில் பணிபுரிந்த 22 பேரும் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் நகரில் படப்ஸ்கோ என்ற ராட்சத ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே இரண்டு முக்கிய நகங்களை இணைக்கும் வகையில் இரும்பு மேம்பாலம் கட்டப்பட்டு இருந்தது.
2.6 கி.மீ நீளம் கொண்ட இந்த பாலத்தில் எப்போதுமே நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயங்கி கொண்டிருக்கும்.
மேம்பாலத்தில் வாகனங்கள் இயக்கும் அதே வேளையில், அதன் கீழே ஆற்று நீரில் கப்பல், படகு போக்குவரத்தும் நடைபெற்று வந்தது.
இந்த சூழலில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் அந்த பல்டிமோர் பாலத்தின் மீது ஒரு சரக்கு கப்பல் அதிவேகமாக மோதியது. இந்த விபத்து நிகழ்ந்த அடுத்த நொடியே, அந்த இரும்பு மேம்பாலம் அப்படியே ஆற்றில் விழுந்தது.
பாலத்துக்கு நடுவில் செல்வதற்கு பதிலாக பாலத்தின் தூணில் கப்பல் மோதியதே இந்த விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த விபத்தின் போது, அந்த பாலத்தில் போய்க் கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட கார்கள் ஆற்றில் விழுந்தன.
தற்போது அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. சிலர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில்தான், அந்த பாலத்தின் மீது மோதிய சரக்கு கப்பல் பற்றிய நிறைய தகலவகள் வெளியாகி வருகிறது. டாலி என்ற சரக்கு கப்பல், சிங்கப்பூரில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.
கிரேஸ் ஓஷன் நிறுவனத்துக்கு இந்த கப்பல் சொந்தமானது ஆகும். இந்நிலையில், விபத்து நேரிட்ட போது இந்தக் கப்பலில் 22 பேர் பணிபுரிந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் அனைவருமே இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அவர்களிடம், விபத்து நடந்தது எப்படி என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.