ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தகவல்கள் ஏற்கனவே இந்தியாவிடம் கூறிவிட்டோம்
கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்திய ஏஜென்ட்கள் குறித்த தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொண்டதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய அரசிடம் அது தொடர்பிலான தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் கனடா பிரதமர் கூறியுள்ளார். இது தொடர்பில் ஒட்டாவா நகரில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிருபர்களிடம் கூறுகையில்,
நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு
நிஜ்ஜார் கொலையில், இந்திய ஏஜென்ட்களுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை இந்திய அரசுடன் பல வாரங்களுக்கு முன்பே பகிர்ந்து கொண்டோம். இதனையடுத்தே கடந்த திங்கட்கிழமை வெளிப்படையாக இந்திய அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டை நான் முன்வைத்தேன்.
எனினும் அதற்கான , ஆதாரங்களை பல வாரங்களுக்கு முன்பே இந்தியாவிடம் பகிர்ந்து விட்டோம். அதேசமயம் நாம் இந்தியாவுடன் இப்பிரச்னையில் ஆக்கப்பூர்வமாக செயல்படவே விரும்புகிறோம்.
அவர்களும் எங்களுடன் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறோம். அப்போது தான் இவ்விஷயத்தில் அடி ஆழத்தை அறிய முடியும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.