அமெரிக்காவில் நடமாடும் வீடுகளில் வசிக்க தடை
நடமாடும் வீடுகளில் வசிக்க தடை விதிக்கவும், வாகன நிறுத்த விதிமுறைகளை அமல்படுத்தவும் சான் பிரான்சிஸ்கோ நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் பிரான்சிஸ்கோ நகரில் சுமார் 8 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
அங்கு சொந்த வீடு இல்லாத மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடகைக்கு குடியேறுகின்றனர். ஆனால் அதிக வீட்டு வாடகையால் அதுவும் எளிதில் கிடைப்பதில்லை.
எனவே பலரும் வாகனங்களிலேயே வீடு போன்ற வசதியை உருவாக்கி அதில் குடியேறுகின்றனர். இந்த வாகனங்கள் ஆங்காங்கே சாலையோரம் நின்று நடமாடும் வீடு போல செயல்படுகின்றன.
அதேசமயம் இந்த நடமாடும் வீடுகளால் சுகாதார சீர்கேடு எழுவதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன. இதனால் நடைபாதைகளை சுத்தமாக வைத்திருக்க சான் பிரான்சிஸ்கோ நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
எனவே இதுபோன்ற நடமாடும் வீடுகளில் வசிக்க தடை விதிக்கவும், வாகன நிறுத்த விதிமுறைகளை அமல்படுத்தவும் உள்ளூர் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.