டொரொன்டோவில் கிரிக்கெட் மட்டை மற்றும் கத்தியால் தாக்குதல்: ஒருவர் படுகாயம்!
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற குழு மோதலில், ஒருவர் கத்திக்குத்து மற்றும் தாக்குதலுக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜேன் வீதி மற்றும் ஃபின்ச் அவென்யூவிற்கு அருகிலுள்ள டெரிடவுன்ஸ் பூங்காவில் அதிகாலை 1:40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தடிகள், பொல்லுகள் மற்றும் கிரிக்கெட் மட்டைகளுடன் வந்த குழுவினருக்கு இடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாக முதலுதவிப் பிரிவினர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.