கட்டார் வழங்கிய மிகப் பெரிய பரிசு ;முட்டாள்தனம் என கொந்தளிக்கும் ட்ரம்ப்
400 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொகுசு போயிங் விமானத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்க்கு பரிசளிக்க கட்டார் முன் வந்துள்ளது.
கட்டார் அளிக்கும் பல கோடி மதிப்பிலான போயிங் விமானத்தை, தான் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பது முட்டாள்தனம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடிந்துகொண்டுள்ளார்.
விலை மதிப்புள்ள பரிசு
அமெரிக்க அரசோ அல்லது ஜனாதிபதிக்கோ, வெளிநாடுகளிலிருந்து இதுவரைக் கிடைத்த பரிசுப் பொருள்களிலேயே மிகவும் விலை மதிப்புள்ள பரிசாக இந்த போயிங் விமானம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பரிசுப் பொருள்களை ஏற்றுக்கொள்வதால், அமெரிக்க அதிபர் எடுக்கும் முடிவுகளில் இந்த நாட்டுக்கு சாதகமான நிலைப்பாடு இருக்க நெருக்கடி ஏற்படும் என எதிர்க்கட்சிகளும், அந்நாட்டு மூத்த வழக்குரைஞர்களும் கருத்துக் கூறி வருகிறார்கள்.
அது மட்டுமல்லாமல், ஒரு அமெரிக்க அதிபராக இருப்பவர், தனது நாட்டின் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடுகளிலிருந்து பரிசுகளை பெற முடியாது.
எனவே, இந்த போயிங் விமானத்தை அமெரிக்க பாதுகாப்புத்துறையின் மூலம் பெற்றுக்கொள்ள அதிபர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், விலை உயர்ந்த போயிங் விமானத்தை பரிசாகப் பெறக் கூடாது என்று செய்தியாளர்களின் கூட்டத்தில் கேள்வி கேட்ட செய்தியாளரை திட்டித்தீர்த்துள்ளார் அதிபர் டொனால்ட் டரம்ப்.
இந்த போயிங் விமானம், தனது அதிபர் அலுவலகப் பயன்பாட்டுக்கு இருக்கும் என்றும், தனிப்பட்ட பயன்பாடுகளுக்கும், அலுவலகப் பயன்பாட்டைத் தவிர்த்து வேறு எதற்கும் பயன்படுத்த விருப்பமில்லை என்றும் கூறியிருக்கிறார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்பட்ட டொனால்ட் டிரம்ப், கத்தாரிடமிருந்து வரும் மிக அற்புதமான பரிசாக இது இருக்கும். இதனை நான் வரவேற்கிறேன். இதுபோன்ற ஒரு பரிசை நான் ஒருபோதும் மறுக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதாவது, மிகவும் விலையுயர்ந்த விமானத்தை, நான் இலவசமாக பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்வதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்றுதான் கூறுகிறேன் என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.