அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு அமேசன் நிறுவுனர் விடுத்த எச்சரிக்கை!
பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் உள்ளதால் விடுமுறை காலங்களில் மக்கள் ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம் என அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு அமேசன் நிறுவுனர் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய ஒன்லைன் விற்பனையகமான அமேசானை உருவாக்கி நடத்தி வரும் ஜெப் (Jeff) பெசோஸ், உலக செல்வந்தர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், ஜெப் பெசோஸ் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில், ‘‘அமெரிக்கா பொருளாதார மந்தநிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
எனவே யாரும் அநாயவசியமாக செலவு செய்யாதீர்கள். பெரிய தொலைக்காட்சி வாங்க நினைத்தால் அந்த முடிவை தள்ளிப் போடுங்கள். அந்த பணத்தை மிச்சப்படுத்தி வையுங்கள். புதிய வாகனம், கார், குளிர்சாதனடிபட்டி உட்பட பெரிய செலவுகளை தள்ளிப்போடுங்கள்.
சிறு தொழில்முனைவோர் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. இப்போது எல்லா துறையிலும் மந்தநிலை நீடிக்கிறது’’ என எச்சரித்துள்ளார். அமேசான் நிறுவனம் மூலம் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
அமேசான் நிறுவனமும் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்கங்களில் ஒன்றாக இது உள்ளது.
ஏற்கெனவே டுவிட்டர், மெட்டா போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான சிஸ்கோவும் 4000 பணியாளர்களை நீக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளால் அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலக மக்களே அச்சத்தில் உறைந்துள்ளனர்.
செலவுகளை குறைக்க, டுவிட்டர், பேஸ்புக், அமேசான் உள்ளிட்ட பல்வேறு டெக் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.