அமெரிக்காவில் நேர்ந்த கொடூரம் ; காதலனை சூட்கேஸில் அடைத்து கொலை செய்த காதலி
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 47 வயதான சாரா பூன் என்ற பெண்ணுக்கு, தனது காதலன் ஜார்ஜ் டோரஸை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2-ம் திகதிஆர்லாண்டோ நீதிமன்ற அறையில், சர்க்யூட் நீதிபதி மைக்கேல் கிரேனிக்-ன் கீழ் இவரது வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை மறு விசாரணை செய்யுமாறு பூன் தரப்பு வைத்த கோரிக்கையை நீதிபதி மறுத்துள்ளார்.
பிப்ரவரி 2020-ம் ஆண்டு, பூனும் அவரது காதலர் டோரஸும் தங்கள் வின்டர் பார்க் குடியிருப்பில் நன்றாக குடித்துவிட்டு கண்ணாமூச்சி விளையாடியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதன்பிறகு பூன், டோரஸை ஒரு சூட்கேஸில் இரவு முழுவதும் அடைத்து வைத்து மூச்சுத்திணற கொன்றுள்ளார்.
அவரை சூட்கேஸில் அடைக்கும் முன், பேஸ்பால் மட்டையால் தாக்கியதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். மறுநாள் காலை, சூட்கேஸுக்குள் இருந்த டோரஸிடம் எந்த பதிலும் வராததை அடுத்து உடனடியாக 911-க்கு அழைப்பு விடுத்துள்ளார் பூன்.
இந்த வழக்கு விசாரணையின் போது, மொபைல் போனில் பூன் எடுத்த வீடியோக்கள் வெளியாகி அவைனரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வீடியோவில் சூட்கேஸுக்குள் சிக்கியிருந்த டோரஸ் உதவிக்காக கெஞ்சுவதை நம்மால் பார்க்க முடிகிகிறது.
அவர் மூச்சுத் திணறுவதையும் பூனிடும் கெஞ்சுவதும், அதற்கு பூன், “உனக்கு இது தேவைதான்” என கூறுவதையும் கேட்க முடிகிறது. சூட்கேஸிற்கு வெளியே நீண்டு கொண்டிருந்த தனது விரல்களால் டோரஸ் தன்னை விடுவித்திருக்கலாம் என்று பூன் தரப்பினர் கொடுத்த வாக்குமூலத்தை இந்த வீடியோக்கள் தவிடு பொடியாக்கியுள்ளதாக அரசுத் தரப்பினர் நீதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.
பூன் டோரஸிடம் பல கொடுமைகளை சந்தித்ததாகவும், தன்னை தற்காத்து கொள்ளவே அவர் இவ்வாறு செய்ததாகவும் பூன் தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.
இருப்பினும், இந்த வாதத்திற்கு எந்தவித ஆதாரமும் இல்லாத காரணதால் நடுவர் மன்றத்தையோ அல்லது நீதிபதியையோ நம்ப வைக்க முடியவில்லை. பூனிற்கு தண்டனை விதிக்கப்பட்டபோது, டோரஸின் குடும்ப உறுப்பினர்கள் உணர்ச்சிவசப்பட்டதோடு கோபமாக கத்தினர்.
“அவர் சிறையில் வாடுவதற்கு தகுதியானவரே” என்று அவரது சகோதரி விக்டோரியா டோரஸும் கூறியுள்ளார். தண்டனை அளிப்பதற்கு முன் நீதிமன்றத்திற்கு அளித்த உரையில், இதற்கு முன் தனக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவங்களில் தலையிட தவறியதற்காக டோரஸின் குடும்பத்தின் மீது பழியை சுமத்த முயன்றார் பூன்.
“நான் கடவுளிடம் மன்னிப்பு கோருகிறேன். அவர் சொர்க்கத்தின் வாசலில் என்னைத் தேடுகிறார்.
அவரிடம் நான் முடிவில்லாமல் எவ்வளவு வருந்துகிறேன் என்பதையும் அதோடு நான் அவரை நேசிப்பதை ஒருபோதும் நிறுத்தபோவதில்லை என்பதையும் அவரிடம் சொல்ல முடியும்” என்றும் பூன் தனது கடைசி வாக்குமூலத்தில் கூறினார்.
இதற்கிடையில், பூன் உண்மையில் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை என்றும் தொடர்ந்து அவர் மற்றவர்கள் மீது பழியை போடுவதாகவும் வழக்கறிஞர்கள் கூறினர். பத்து நாட்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அக்டோபர் 25 அன்று பூன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.