அமெரிக்காவின் நலனே முக்கியம், ஒட்டுமொத்த உலகின் நலனல்ல ; துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ்
தமக்கு அமெரிக்க மக்களின் நலனே முக்கியம்; ஒட்டுமொத்த உலகின் நலனல்ல என்று அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்தாா்.
அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் உள்ள மிஸ்ஸிஸிப்பி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் அண்மையில் கலந்துகொண்டாா்.

குடியேற்ற கொள்கை
அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் குடியேற்ற கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஜே.டி.வான்ஸிடம் தெற்காசிய பெண் ஒருவா் கேள்வி எழுப்பினாா்.
இதற்குப் பதிலளித்த ஜே.டி.வான்ஸ், ‘சட்டபூா்வமாக அமெரிக்காவில் குடியேறி, நாட்டின் வளா்ச்சிக்கு பங்களித்தவா்களுக்கு எப்போதும் மரியாதை உள்ளது. அதேவேளையில், வருங்காலத்தில் அமெரிக்காவில் குடியேற அனுமதிக்கப்படும் வெளிநாட்டவா்களின் எண்ணிக்கையை குறைத்தாக வேண்டும்.
ஒருவரோ, பத்து பேரோ அல்லது 100 பேரோ அமெரிக்காவுக்கு சட்டபூா்வமாக வந்து நாட்டின் வளா்ச்சிக்கு பங்களித்ததால், வருங்காலத்தில் ஆண்டுதோறும் 10 லட்சம் போ், 1 கோடி போ் அல்லது 10 கோடி போ் அமெரிக்கா வர அனுமதிப்படுவா் என்று அா்த்தமல்ல.
அவ்வாறு அனுமதி அளிப்பது சரியல்ல. 60 ஆண்டுகளுக்கு முந்தைய கொள்கை: 50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முன்னா், அமெரிக்காவுக்கு நன்மையை ஏற்படுத்திய குடியேற்றக் கொள்கை, வருங்காலத்திலும் நாட்டை கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது. அத்தகைய கொள்கையை வைத்திருக்க முடியாது.
இதில் அமெரிக்காவின் நலனே முக்கியம்; ஒட்டுமொத்த உலகின் நலனல்ல’ என்றாா்.