கூட்டத்தில் பங்கேற்க ரஷ்ய முக்கியஸ்தர்களுக்கு விசா கொடுக்காத அமெரிக்கா!
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்க ரஷ்ய முக்கியஸ்தர்களுக்கு அமெரிக்கா இன்னமும் விசா வழங்வில்லை என கூறப்படுகின்றது.
குறித்த கூட்டம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் (Sergei Lavrov) தலைமையில் 56 பேருக்கு ரஷ்யா விசா கோரியிருந்தது.
இந்நிலையில் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸுக்கு (Antonio Guterres) அனுப்பிய கடிதத்தில் நிலைமை அதிர்ச்சி தருவதாக ரஷ்யா கூறியது.
ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமையக ஒப்பந்தம்
அதேவேளை 1947-ஆம் ஆண்டு கையெழுத்திட்ட ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமையக ஒப்பந்தப்படி ஐக்கிய நாட்டு நிறுவனக் கூட்டத்தில் பங்கேற்க வெளிநாட்டு அரசதந்திரிகளுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கவேண்டும்.
எனினும் பாதுகாப்பு, பயங்கரவாதம், வெளிநாட்டுக் கொள்கை ஆகிய காரணங்களின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்படலாம் என அமெரிக்கா கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமெரிக்கா ஏற்கனவே ரஷ்யர்களுக்கு அனுமதி தரவில்லை.
இவ்வாறான நிலையில் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமையகம் இருக்கும் நாடு என்ற முறையில் தனது கடமைகளை வாஷிங்டன் பொறுப்போடு பார்ப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியது.
மேலும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 77-ஆவது கூட்டம் இம்மாதம் 13-ஆம் திகதி தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.