ட்ரம்ப்பின் ஆட்சியால் பிரித்தானியாவில் குடியுரிமை பெற துடிக்கும் அமெரிக்கர்கள் ; வெளியான தகவல்
பிரித்தானியாவில் குடியுரிமை பெறுவதில் அமெரிக்கர் அதிகளவில் ஆர்வம் காட்டுவதாக பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது. இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் இதுவரையில் இல்லாத வகையில், அதிகளவிலான அமெரிக்கர்கள் குடியுரிமை பெற விருப்பம் தெரிவித்ததாக பிரிட்டன் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம்வரையில் மட்டும் 6,618 அமெரிக்கர்கள், பிரிட்டன் குடியுரிமைக்கு விண்ணப்பித்தனர். இது, பதிவுகள் தொடங்கப்பட்ட 2004 ஆம் ஆண்டில் இருந்து அதிகளவிலான வருடாந்திர எண்ணிக்கை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
ட்ரம்ப்பின் ஆட்சி
மேலும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களுக்கு இடையில் மட்டும் 1,900-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் பெறப்பட்டதாக பிரிட்டன் அரசு தெரிவித்தது. இதுவும், எந்தவொரு காலாண்டிலும் பெறாத அதிக எண்ணிக்கையே.
அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதிலிருந்து, பிரித்தானியா செல்வதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆலோசனைகளையும், இதுவரையில் இல்லாத அளவில், அதிகமானோர் பெற்றதாக குடிவரவு வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
பிரித்தானியாவில் மனைவி, பெற்றோர், குடும்பத்தினரைக் காரணமாகக் கொண்டுதான் பெரும்பாலானோர் குடியேறிய விரும்பியதாகவும், தொழிலாளர்களுக்கான தற்காலிக விசாக்களுடன் பிரிட்டனில் குடியேற சிலர் விரும்பியதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இருப்பினும், ட்ரம்ப்பின் ஆட்சியால்தான் அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு குடியேற முயல்வதாக சமூக ஊடகங்களில் இணையவாசிகள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.