ஆண்ட்ரூவின் பதவி பறிப்பு ; மன்னரை குறைகூறிய எப்ஸ்டீன்
பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான சிறப்புப் பிரதிநிதி பதவியிலிருந்து ஆண்ட்ரூ விலக்கப்படுவதற்கு மன்னர் சார்லஸ்த்தான் காரணம் என அமெரிக்க பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் குற்றம் சாட்டிய மின்னஞ்சல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான சிறப்புப் பிரதிநிதியாக (Trade Envoy) 2001 முதல் 2011 வரை ஆண்ட்ரூ பணியாற்றினார்.

ஆண்ட்ரூ -ஜெப்ரி எப்ஸ்டீனுடனான நெருங்கிய நட்பு
இப்பதவியானது ஆண்ட்ரூவுக்கு உலக நாடுகளின் உயர்மட்ட அரசுகள் மற்றும் வர்த்தகத் தொடர்புகளை அணுகும் அதிகாரத்தை வழங்கியிருந்தது.
எனினும் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுடனான அவரது நெருங்கிய நட்பு குறித்த விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, 2011 ஜூலை 21 அன்று அவர் இப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க நீதித் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் 30 மில்லியன் கோப்புகளில், ஆண்ட்ரூ பதவி விலகிய அன்று எப்ஸ்டீன் தனது நண்பர்களுடன் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல் விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆண்ட்ரூவின் பதவி பறிப்பிற்கு அப்போதைய இளவரசராக இருந்த தற்போதைய மன்னர் ‘சார்லஸ்’ தான் காரணம் என எப்ஸ்டீன் ஒரு மின்னஞ்சலில் கூறியுள்ளமை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.