ரொபோக்களின் விநோத போராட்டம் ; மனிதர்களுக்குப் பதிலாக களமிறங்கி கோரிக்கை விடுத்த இயந்திர மனிதர்கள்
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், வேலை வாய்ப்புப் பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்களை இயற்றுமாறு கோரி போலந்தின் வார்சோ நகரில் விநோதமான போராடமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போலந்தின் டிஜிட்டல் விவகார அமைச்சுக்கு அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பல்வேறு வகையான 30-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மனித வடிவிலான (Humanoid) ரோபோக்கள் மற்றும் நான்கு கால் விலங்குகளைப் போன்ற (Quadrupeds) ரோபோக்களை உள்ளடக்கிய இந்தக் குழுவினர், கொடிகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி, வட்டமாகச் சென்று அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒலிபெருக்கிகள் ஊடாக “வேலைத் தளங்களைப் பாதுகாத்திடுங்கள்”, “சட்டங்களை இயற்றுவதற்கான நேரம் இது” மற்றும் “தாமதிக்காமல் முறைப்படுத்துங்கள்” போன்ற கோஷங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட Agibot A3 என்ற மனித வடிவிலான ரோபோ ஒன்று AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், இந்தத் தொழில்நுட்பம் தற்போது ஒரு நடைமுறை யதார்த்தம் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே தாங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ தொழில்நுட்பம் காரணமாக வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்படும் தாக்கம் குறித்துப் பொதுமக்களிடையே விவாதத்தை உருவாக்கும் நோக்கில் 'Democratism' அமைப்பினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.