பரிதவிப்பில் 15 மில்லியன் மக்கள்... நூற்றுக்கணக்கானோர் அவசரமாக வெளியேற்றம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை இன்னொரு சக்தி வாய்ந்த புயல் நெருங்குவதாக, அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே புயல் மற்றும் பெருவெள்ளத்தால் தடுமாறிப்போயுள்ள கலிபோர்னியா மக்கள், தற்போது இன்னொரு புயலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.
திங்கட்கிழமை குறித்த புயலானது மாகாணத்தை தாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய மற்றும் வடக்கு கலிபோர்னியாவில் கனத்த மழையும், பெருவெள்ளமும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் நெருங்கி வருவதால் கலிபோர்னியா மற்றும் நெவாடாவில் சுமார் 15 மில்லியன் மக்கள் வெள்ள அபாய கண்காணிப்பில் உள்ளனர். 6 ஆங்குலம் வரையில் மழை பெய்யக் கூடும் எனவும், திங்கட்கிழமை இரவு தொடங்கி, மழையின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
இதனிடையே, ஆபத்து அதிகமான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற முடியவில்லை எனவும், ஆனால் அவர்களை மீட்கும் நடவடிக்கை தொடரும் என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, கடந்த இரண்டு வாரங்களாக கடும் பனிப்பொழிவால் ஏற்கனவே புதைந்து கிடக்கும் பகுதிகளை இந்தப் புதிய புயல் மேலும் சேதப்படுத்தலாம் என்றே உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி, கவர்னர் கவின் நியூசோம் கோரிய அவசரகால பிரகடனத்திற்கு ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.