ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் எடுத்த அதிரடி கல்வித் திட்டம்!
இஸ்ரேலின் இராணுவ உளவுத்துறை இயக்குநரகமான AMAN, அதன் அதிகாரிகளுக்கு இஸ்லாமிய மற்றும் அரபு மொழிப் பயிற்சியை கட்டாயமாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று ஏற்பட்ட உளவுத்துறை தோல்வியின் பின்னணியில், இது ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
AMAN தலைவர் மேஜர் ஜெனரல் ஷ்லோமி பைண்டரின் உத்தரவைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டின் முடிவிற்குள், AMAN-ல் பணியாற்றும் 100% உளவு அதிகாரிகள் இஸ்லாமிய ஆய்வுகளில் பயிற்சி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 50% பேர் அரபு மொழிப் பயிற்சியும் பெறுவார்கள். இது வரை தொழில்நுட்பம் மற்றும் சைபர் புலனாய்வு போன்ற துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் இவ்வகை பயிற்சியில் பங்கேற்கவில்லை.
இப்போது, ஹவுதி மற்றும் ஈராக் அரபு மொழி வழக்குகள், பேச்சு வழக்குகள், உள்ளூர் கலாசாரப் புரிதல்கள் ஆகியவற்றிலும் அவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இதற்காக, அரபு மற்றும் இஸ்லாமிய கல்விக்கென்று ஒரு புதிய துறையும் உருவாக்கப்பட உள்ளது.
2023 அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில், 1,180 இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும், 251 பேர் பிணையாகக் கடத்தப்பட்டனர்.
இந்த தாக்குதல், இஸ்ரேலின் உளவுத்துறை பிளவுகளை வெளிக்கொணர்ந்தது. இதையடுத்து தொடங்கிய ஹமாஸ் – இஸ்ரேல் போர் இன்று வரை காசா பகுதியில் நீடிக்கிறது. இதில் இதுவரை 60,000 பேர் கொல்லப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, TELEM எனும், இஸ்ரேலிய பள்ளிகளில் அரபு மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களை ஊக்குவிக்கும் திட்டம், பட்ஜெட் குறைபாடுகளால் மூடப்பட்டிருந்தது.
இப்போது, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த திட்டத்தை மீண்டும் இஸ்ரேலிய ராணுவம் செயல்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.