ரஷ்யாவிடமிருந்து கைவிட்டுப்போன மற்றுமொரு நகரம்
உக்ரேன், கிழக்கில் உள்ள தளவாட நடுவமான லீமன்னை (Lyman) ரஷ்யாவிடமிருந்து முழுமையாக மீட்டெடுத்திருக்கிறது. வாரயிறுதியில் ரஷ்யப் படைகள் அவ்விடத்திலிருந்து வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
உக்ரேனியத் துருப்புகள் சுற்றிவளைப்பதைத் தவிர்க்க தனது படைகளை மீட்டுக்கொண்டதாக ரஷ்யா தெரிவித்தது.
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேன் பதிலடித் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், லீமன் நகர் கைவிட்டுப்போனது ரஷ்யாவுக்கு மேலும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அதேசமயம் ரஷ்யாவிடமிருந்து உக்ரேன் தனது பிரதேசங்களைப் மீட்டெடுக்கப் போவதாகச் சூளுரைத்திருக்கிறது. கடந்த வாரம் உக்ரேனின் 4 பகுதிகளைத் தன்னுடன் இணைத்துக்கொண்டிருப்பதாக ரஷ்யா அறிவித்திருந்த நிலையில் அவற்றில் ஒரு பகுதியாக லீமன் உள்ளது.
அதேவேளை ரஷ்யாவின் அறிவிப்புக்கு மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மே மாதத்தில் லீமன்னைக் கைப்பற்றியபோது, அதை ஒரு தளவாடத் தளமாகவும் போக்குவரத்து நடுவமாகவும் ரஷ்யா பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.