வரவு செலவுத் திட்டம் குறித்த முதல் நம்பிக்கை வாக்கெடுப்பில் லிபரல் அரசாங்கம் வெற்றி
கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் அரசு, 2025 வரவு செலவுத் திட்டத்துடன் (Federal Budget) தொடர்புடைய முதல் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று தனது ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
மொத்தம் 198 வாக்குகள் ஆதரவாகவும், 139 எதிராகவும் அளிக்கப்பட்டது. இதில் லிபரல், நியூ டெமோக்ராட், பிளாக் குவெபெக்குவா மற்றும் கிரீன் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, கன்சர்வேட்டிவ் கட்சியின் வரவு செலவுத் திட்ட எதிர்ப்பை தோற்கடித்தனர்.
பியர் பொய்லியெவ்ரின் கன்சர்வேட்டிவ் கட்சி, நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் பொருளாதாரத் திட்டங்களை நிராகரிக்க முனைந்தது.

மக்களுக்குச் சுமையாக இல்லாத வரவு செலவுத் திட்டம்” வழங்குவதற்குப் பதிலாக, அரசு “ஒவ்வொரு செலவும் கனடியர்களின் பைகளில் இருந்து வரி மற்றும் பணவீக்கம் வழியாகப் பெறப்படும் ஒரு தவறான வரவு செலவுத் திட்டத்தை” முன்வைத்துள்ளது என கன்சர்வேட்டிவ் கட்சி குற்றம் சாட்டியது.
பாதீட்டு பற்றாக்குறை, தொழில்துறை கார்பன் வரி, அரசுத் துறைச் செலவுகள், புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் பற்றிய திட்டமின்மை போன்றவை முக்கிய பிரச்சினைகளாக சுட்டிக்காட்டப்பட்டன.
வாக்கெடுப்புக்கு சில மணிநேரங்களுக்கு முன், அரசு அவைத் தலைவரான ஸ்டீவன் மெகின்னனின் அலுவலகம், இந்த வழக்கமான நடைமுறை வாக்கெடுப்புகளை நம்பிக்கை வாக்காகக் கருதப்படும் என்று அறிவித்தது.
இதன் அடிப்படையில், கன்சர்வேட்டிவ் திருத்தமும், வெள்ளிக்கிழமை வாக்கெடுப்புக்கு வரவிருக்கும் பிளாக் குவெபெக்குவா திருத்தமும் இரண்டும் நம்பிக்கை வாக்காகக் கருதப்பட்டன.
ஆனால் வாக்கெடுப்பிற்கு முன், இடைக்கால NDP தலைவர் டான் டேவிஸ், தமது கட்சியின் ஏழு எம்.பி.க்களும் அந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று அறிவித்ததன் மூலம், லிபரல் அரசுக்கு தேவையான வாக்குகள் உறுதி செய்யப்பட்டன.