இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க அரபு, இஸ்லாமிய நாடுகள் தீர்மானம்
காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியைத் தடுப்பதற்கு இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் தீர்மானித்துள்ளன.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தொடுத்த போர் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். போரை நிறுத்த பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில், கடந்த வாரம் கட்டாரில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைமையகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடனான அவசர ஆலோசனைக் கூட்டத்துக்குக் கட்டார் அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர உச்சி மாநாடு கட்டார் தலைநகர் தோஹாவில் நேற்று நடைபெற்றது.
இதன்போது இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
அத்துடன் காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியைத் தடுக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.