கொலையில் முடிந்த வாக்குவாதம்: சிக்கிய இளைஞர்
வின்னிபெக்கில் 23 வயது இளைஞர் கொலை வழக்கை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், ஜூலை 31ம் திகதி இரவு அட்லாண்டிக் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் கூடுகை ஒன்று நடந்துள்ளது.
இதில், 41 வயதான William Randall Sharpe என்பவருக்கும் 23 வயதான இளைஞர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக மாறவே, அந்த இளைஞர் கொடூரமாக தாக்கிவிட்டு, சம்பவயிடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனிடையே, அந்த குடியிருப்பில் உள்ள ஒருவர் 911 இலக்கத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதுடன், தாக்குதலுக்கு இலக்கான நபர் பேச்சு மூச்சின்றி கிடப்பதாக தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர மருத்துவ உதவிக்குழுவினர், பரிசோதிக்கையில், அந்த நபர் ஏற்கனவே மரணமடைந்துள்ளது தெரிய வந்தது.
இந்த நிலையில் 23 வயதான Donnie Lavallee என்பவர் மீது பொலிசார் கொலை வழக்கு பதிந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டில் வின்னிபெக் நகரில் நடந்தேறும் 26வது கொலை என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.