குவாத்தமாலாவில் ஆயுதத் தாக்குதல் ; நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட நால்வர் உயிரிழப்பு
மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் நடத்தப்பட்ட ஆயுதப் பிரயோகத் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் Julio César Portillo Paz
குவாத்தமாலாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜாகாபா (Zacapa) மாகாணத்தின் ரியோ ஹோண்டோ (Río Hondo) பகுதியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் குவாத்தமாலாவின் UNE கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரான ஜூலியோ சேசர் போர்ட்டிலோ பாஸ் (Julio César Portillo Paz) என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஆயுதப் பிரயோகத்தில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர் சார்ந்த அரசியல் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், குறித்த தாக்குதலின்போது கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று காவல்துறை அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இத்தாக்குதலில் மொத்தம் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள குவாத்தமாலா ஜனாதிபதி பெர்னார்டோ அரேவாலோ (Bernardo Arévalo), தாக்குதலுடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பாதுகாப்புப் படையினருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
குற்றவாளிகளின் வன்முறைச் செயல்கள் மூலம் குவாத்தமாலா மக்களின் வாழ்க்கையையும் பாதுகாப்பையும் சீர்குலைக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தனது X சமூக வலைதளப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த ஆயுதத் தாக்குதலுக்கான காரணம் மற்றும் அதனை மேற்கொண்டவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.