நொர்த் யோர்க்கில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை: 16 வயது சிறுவன் மீது கொலைக் குற்றம்
கனடாவின் நொர்த் யோர்க் பகுதியில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு முதலாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் ஜேன் வீதி மற்றும் பின்ச் அவென்யூ வெஸ்ட் சந்திப்பிற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகே காஷி அகஸ்ட் என்ற சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் மீது முதலாம் நிலை கொலைக் குற்றம் மற்றும் நன்னடத்தை உத்தரவை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
கனடாவின் இளையோர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் சந்தேகநபரின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான பின்னணி அல்லது காரணம் குறித்து பொலிஸார் இதுவரை எவ்வித தகவலும் வெளியிடவில்லை.
இறந்த காஷி அகஸ்டிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இந்த வாரத் தொடக்கத்தில் இடம்பெற்றதுடன், அவர் அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு நல்ல சிறுவன் என உறவினர்களும் நண்பர்களும் நினைவு கூர்ந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிஸாரையோ அல்லது குற்றத் தடுப்புப் பிரிவையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.