சுமண ரத்தன தேரரை கைது செய்ய பகிரங்க பிடியாணை
மட்டக்களப்பு சுமண ரத்தன தேரரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி கையடக்க தொலைபேசி சமிஞ்சைகளை அடிப்படையாகக் கொண்டு அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வன்முறையை ஏற்படுத்தும் வகையில் கருத்து
இனங்களிடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்தமை தொடர்பில் மட்டக்களப்பு அம்பிட்டிய சுமண ரத்தன தேரரை கைது செய்வதற்கான பகிரங்க பிடியாணை நேற்று (15) பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன் தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மட்டக்களப்பு நீதவான் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்துரைத்த மட்டக்களப்பு அம்பிட்டிய சுமண ரத்தன தேரர், இனங்களிடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார்.
வன்முறையை ஏற்படுத்தும் வகையில் கருத்துரைத்தமைக்கு எதிராக, சட்டத்தரணி தனுக்க ரனஞ்சக என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டது. அந்த முறைப்பாடு தொடர்பிலேயே சுமண ரத்தன தேரரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.