போதைப்பொருள் கடத்தி வந்த 3 படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்; 8 பேர் உயிரிழப்பு
கிழக்கு பசுபிக் பெருங்கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் 3 படகுகள் மீது அமெரிக்கா இன்று(16) தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலால் பசுபிக் கடல் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.

வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு
வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகவும் இதனால் அந்நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளதாகவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்காக வெனிசுலா எல்லையில் போர் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. அதோடு , வெனிசுலாவுக்கு சென்ற எண்ணெய் கப்பலையும் அமெரிக்க படைகள் தடுத்து நிறுத்தி தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றுள்ளன.
அதேவேளை, கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்தவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடல் வழியாக படகில் போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.