இஸ்ரேலிய பிரதமர் மீதான பிடியாணை ; வரவேற்கும் பிரான்ஸ்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும்,. ஹமாஸ் தலைவர்களிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கவேண்டும் என ஐசிசியின் வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளதை பிரான்ஸ் வரவேற்றுள்ளது.
இந்நிலையில் ஐசிசியின் வழக்குரைஞர் தனது வேண்டுகோளிற்கு ஆதரவாக சமர்ப்பிக்கும் ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர் விசாரணைக்கு முந்தைய நீதிமன்றம் இஸ்ரேல் தொடர்பில் தனது முடிவை எடுக்கலாம் என பிரான்சின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதோடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதன் சுதந்திரம் தண்டனையிலிருந்து விலக்களித்தல் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை பிரான்ஸ் ஆதரிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த பல மாதங்களாக சர்வதேச மனிதாபிமான சட்டங்களை இறுக்கமாக பின்பற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் , காசா பள்ளத்தாக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதையும் மனிதாபிமான உதவிகள் மறுக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
அதேவேளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வேண்டுகோள் தொடர்பில் மேற்குலகின் ஏனைய நாடுகளின் நிலைப்பாட்டிற்கும் பிரான்ஸ் நிலைப்பாட்டிற்கும் இடையில் பெரும் வேறுபாடு காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.