அமெரிக்காவில் இந்துக் கோவிலைத் தாக்கத் திட்டமிட்ட 19 வயது இளைஞர் கைது
அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு அருகிலுள்ள இந்து ஆலயமொன்றை இலக்குவைத்து பாரிய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலினாய்ஸ் மாநிலத்தின் பலடைன் (Palatine) பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, 16 அங்குலத்திற்கும் குறைவான நீளமுடைய குழாயைக் கொண்ட துப்பாக்கியை வைத்திருந்தமை தொடர்பிலும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் சந்தேகநபரின் வீட்டில் மேற்கொண்ட சோதனையின்போது, துப்பாக்கி, நிரப்பப்பட்ட ரவைக் கொள்கலன்கள், நூற்றுக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மற்றும் உடல் பாதுகாப்புக் கவசம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், சந்தேகநபரின் மின்னணு சாதனங்கள் மற்றும் மின்னணுத் தகவல் பரிமாற்றங்களைப் பொலிஸாரும் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ.யும் (FBI) ஆய்வு செய்துள்ளனர்.
இதன்போது, வெள்ளையின மேலாதிக்கக் கொள்கையை ஆதரிப்பதாக அடையாளப்படுத்திக்கொண்ட சந்தேகநபர், வெள்ளையரல்லாத மக்களுக்கு எதிரான வெறுப்பை வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் ஓர் அறிக்கையையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வழக்குத் தரப்பு முன்வைத்த தகவல்களின்படி, சந்தேகநபர் தனது பணியிட சக ஊழியர் ஒருவருடன் தொலைபேசியில் உரையாடியபோது, தனது துப்பாக்கி செயலிழந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
மேலும், ஏ.ஆர். வகைத் துப்பாக்கியைக் காட்டும் படங்களையும், துப்பாக்கியின் விசையை அழுத்தியபோதும் அது இயங்கவில்லை என்பதைக் காட்டும் தகவல்களையும் அவர் அனுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தந்திரோபாயப் பாதுகாப்பு அங்கி அணிந்திருந்த தனது புகைப்படத்தையும் அவர் அனுப்பியுள்ளதாக வழக்குத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபர் பணியாற்றிய டாகோ பெல் (Taco Bell) உணவகத்தைச் சேர்ந்த இரு சக ஊழியர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரைத் தொடர்புகொண்டு சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.