பிரான்சில் பயங்கர விமான விபத்து: 11 பேர் பலி!
வடகிழக்கு பிரான்சின் டோம்ப்ளெய்ன் நகரில், ஸ்கைடைவிங் சாகசப் பயணத்திற்காக ஆட்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 11 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் இந்த விபத்து நேரிட்டதாக மியூர்த்-ஏ-மொசெல் பிராந்தியத்தின் ஆளுநர் இவ்ஸ் செகுய் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் பயணித்த விமானி மற்றும் 10 பயணிகள் என மொத்தம் 11 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலியானவர்களில் 5 பேர் ஸ்கைடைவிங் மாணவர்கள், 5 பேர் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுவிப்பாளர்கள் ஆவர். விபத்து நடந்தவுடனேயே அவசரக்கால மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்களது பணிகளைத் தொடங்கினர்.
விபத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடமிருந்து அதிகாரிகள் வாக்குமூலங்களைச் சேகரித்து வருகின்றனர்.
மீட்புக்குழுவினரும் காவல் துறையினரும் எவ்வித தடையுமின்றி விபத்து நடந்த பகுதிக்குச் சென்று தங்களது பணிகளை மேற்கொள்வதற்காக, டோம்ப்ளெய்ன் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என எனப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இவ்விபத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமான விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.