சுவிட்சர்லாந்திலிருந்து பழங்குடியினரின் புனிதப் பொருட்களை மீட்கப் போராட்டம்
சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு தனியார் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தங்களின் ஆயிரக்கணக்கான பாரம்பரிய மற்றும் புனிதப் பொருட்களை உடனடியாகக் கனடாவிற்குத் திரும்பக் கொண்டுவர அவசர உதவி தேவை என்று பழங்குடியின ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூரிச் நகருக்கு அருகில் உள்ள இந்தத் தனியார் அருங்காட்சியகம் தற்போது மூடப்பட்டுவிட்டதால், அங்குள்ள சடங்குப் பொருட்கள், மணிகளால் அலங்கரிக்கப்பட்ட பாரம்பரிய உடைகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயுதங்கள் போன்ற புனிதப் பொருட்கள் ஏலத்தில் விற்கப்படுவதற்கு முன்பாக அவற்றை மீட்கும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தற்போது காலம் மிகவும் பொன் போன்றது. அந்தப் பொருட்கள் அனைத்தும் சுவிட்சர்லாந்தில் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

எனவே, பணத்தைத் திரட்டி அந்தப் பொருட்களை நம் மக்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசரச் சூழலில் நாம் இருக்கிறோம் என பழங்குடியின ஆதரவாளரான கொலீன் ரஜோட் தெரிவித்துள்ளார்.
இப்பொருட்களை மீட்பதற்காகச் செயல்படும் ‘பிரிங்கிங் தெம் ஹோம்’ (Bringing Them Home) அமைப்பைச் சேர்ந்த ரஜோட் மற்றும் பிற உறுப்பினர்கள், பொருட்களை விலைக்கு வாங்கி கனடாவிற்குத் திரும்பக் கொண்டுவர 20 மில்லியன் டொலர் நிதியைத் திரட்ட முயன்று வருகின்றனர்.
அந்த அருங்காட்சியகத்தின் உரிமையாளர் ஓய்வு பெறவுள்ளதால், இந்தச் சேகரிப்புகளை சுமார் 17 மில்லியன் டொலருக்கு விற்க விரும்புவதாக ரஜோட் தெரிவித்துள்ளார்.
எனினும், ஒரு மதிப்பீட்டாளரை (Appraiser) சுவிட்சர்லாந்திற்கு அனுப்பி, ஒவ்வொரு பொருளையும் ஆய்வு செய்த பின்னரே அதன் உண்மையான மதிப்பைத் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
பொருட்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டால், அவை வேறு ஏலதாரர்களின் கைகளுக்குச் சென்றுவிடும் என்று ரஜோட் எச்சரிக்கிறார்.
"இவை துபாய், நியூயார்க் அல்லது உலகின் ஏதேனும் ஒரு பில்லியனரின் அலுவலகத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள் வெறும் காட்சிப் பொருளாக முடங்கிவிடக்கூடும். அது முற்றிலும் தவறானது," என்று அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.