தெற்கு ஈராக் மின் உற்பத்தி நிலையத்தில் பாரிய தீ விபத்து: நால்வர் உயிரிழப்பு
தெற்கு ஈராக்கில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேர் காயமடைந்துள்ளதாக ஈராக் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹர்தா மின் உற்பத்தி நிலையத்திலும், அதனை அண்டிய வீடுகளிலும் பரவிய இந்தத் தீயை சிவில் பாதுகாப்புப் பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ஈராக் செய்தி முகவரகம் இன்று தெரிவித்துள்ளது.
800 மெகாவோட் மின் உற்பத்தித் திறன் கொண்ட குறித்த மின் நிலையத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தைத் தொடர்ந்து, அதன் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளிகளில், விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து பாரிய புகை மண்டலம் வெளியேறுவதும், வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதும் பதிவாகியுள்ளன. அத்துடன், மீட்புப் பணிகளை அவதானிப்பதற்காகப் பெருமளவான மக்கள் அப்பகுதியில் கூடியிருப்பதையும் காண முடிகிறது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. பல தசாப்த காலமாகப் போதிய முதலீடுகள் இன்மை, முறையற்ற பராமரிப்பு மற்றும் குறிப்பாகக் கடும் வெப்பமான கோடை காலங்களில் அதிகரிக்கும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமை போன்ற காரணங்களால் ஈராக்கின் மின்சாரக் கட்டமைப்பு நீண்டகாலமாகப் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னரும் துணை மின் நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்துக்கள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளால் அந்நாட்டில் பரவலான மின் தடைகள் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.