ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்? நெதன்யாகு வெளியிட்ட முக்கியத் தகவல்
ஈரான் மீது மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துகள் சர்வதேச அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளன.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் எட்டு மாதங்களுக்கும் மேலாக அமெரிக்க இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல்கள் மூலம் இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் பெற்றுக்கொள்ளவே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முயற்சிப்பதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், ஈரானுக்கு எதிராக மற்றுமொரு இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க முடியாது என மூத்த அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் நெதன்யாகு தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் மீதான அடுத்தகட்டத் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கட்டளைப் பிரிவு அதிகாரிகள் தாக்குதலுக்கான ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும், அதனை எப்போது ஆரம்பிப்பது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் கடந்த வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் 51 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 48 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதன்போது, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கும் மசோதா நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரான் மீதான போரை முன்னெடுப்பதற்கும் ட்ரம்பின் ஒப்புதலைப் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு செனட் உறுப்பினர்கள் ஆதரவு வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், ஈரான் விவகாரத்தில் எந்தவொரு முடிவையும் அவசரமாக எடுக்க விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு என்ன நடைபெறப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் அடுத்த ஆண்டில் கலந்துரையாடவுள்ளதாகவும், அதற்குப் போதிய கால அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீண்டும் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்களும், அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துகளும் ஈரான் தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.