கூட்டாளிகளைத் திரட்டும் திறன் அமெரிக்காவிடம் இனி இல்லை ; ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் கருத்து!
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் முடிவுகளைச் சுட்டிக்காட்டி, ஈரானுக்கு எதிராகத் தனது கூட்டாளிகளைத் திரட்டும் திறன் அமெரிக்காவிடம் இனி இல்லை என்று ஈரானின் உச்சத் தலைவரின் ஆலோசகரும் உதவியாளருமான முகமது மொக்பர் கூறியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் இன்று இது தொடர்பில் பதிவிட்டுள்ள மொக்பர், "நேற்று நடைபெற்ற ஷென்சென் உச்சிமாநாடு இப்பகுதிக்கு ஒரு தெளிவான செய்தியை வழங்கியுள்ளது.

ஈரானுக்கு எதிராக ஆதரவைத் திரட்டும் செல்வாக்கு அமெரிக்காவிடம் இனி இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெற்று வாக்குறுதிகளுடன் சீனாவுக்குச் சென்றார், ஆனால் இறுதியில் எதையும் பெறாமல், அவருக்குச் சாதகமற்ற ஒரு அறிக்கையுடன் அங்கிருந்து திரும்பினார் என்று அவர் கூறினார்.
மேலும், வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணை ஆகியவற்றின் பாதுகாப்பு என்பது ஈரானைப் பொறுத்தவரை நிச்சயமாக ஒரு 'சிவப்புக் கோடு' (தாண்டக்கூடாத எல்லை)" என்று குறிப்பிட்ட மொக்பர், அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இஸ்லாமியக் குடியரசின் ஏழு அடிப்படை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.