ஹோர்முஸ் நீரிணை முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ; ட்ரம்ப் மீண்டும் அதிரடி அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய கருத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணை ஊடாக வரலாறு காணாத அளவில் எண்ணெய் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கக் கடற்படை அப்பகுதியில் முற்றுகையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை காரணமாக ஹோர்முஸ் நீரிணையின் முழுமையான கட்டுப்பாடும் அமெரிக்காவின் வசம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து செல்லும் அனைத்துக் கப்பல்களும் தமது பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என ஈரானிய அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
குறித்த விதிமுறைகளைப் பின்பற்றத் தவறும் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் ஈரான் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற்றுக்கொள்ள அமெரிக்கா அனுமதிக்காது எனவும் ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் முரண்பாடுகள் நீடித்து வரும் நிலையில், அப்பகுதியின் முழுமையான கட்டுப்பாடு தம்மிடமே இருப்பதாக ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.