அமெரிக்காவில் சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் : அதிர்ச்சியில் மக்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படும் சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சினோ ஹில்ஸ் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அங்கு வாழும் இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி பாப்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், "இந்த முறை கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸில் மற்றொரு கோவில் அவமதிக்கப்பட்டுள்ளது.
இந்து சமூகம் வெறுப்புக்கு எதிராக உறுதியாக நிற்கிறது. வெறுப்பை வேரூன்ற விடாமல் தடுக்க சினோ ஹில்ஸ் மற்றும் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம். அமைதியும் இரக்கமும் நிலவுவதை நமது மனிதநேயமும் நம்பிக்கையும் உறுதி செய்யும்" என கூறப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் 10 இந்து கோவில்கள் தாக்கப்பட்டிருப்பதாக வட அமெரிக்க இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.