அமெரிக்காவின் முதல் கறுப்பின பாதுகாப்புச் செயலாளராக ஆஸ்டின் நியமனம்!
அமெரிக்காவின் முன்னாள் ராணுவ ஜெனெரலான லாயிட் ஜே. ஆஸ்டின், நாட்டின் முதல் கருப்பின பாதுகாப்பு செயலாளராக அமெரிக்க செனட் சபையால் உறுதிப்படுத்தப்பட்டார். 93-2 வாக்கு வித்தியாசத்தில் அதிபர் ஜோ பிடெனின் ஆஸ்டின் தேர்வுக்கு செனட் சபை ஒப்புதல் அளித்தது. இதே போல் தேசிய புலனாய்வு இயக்குநராக பதவியேற்கும் முதல் பெண்மணியாக அவ்ரில் ஹைன்ஸ் தேர்வும் செனட் சபையால் உறுதி செய்யப்பட்டது.
நீநிலையில் பிடென் தனது தேசிய பாதுகாப்பு அணியில் தேர்வு செய்துள்ள மற்றவர்களுக்கும் செனட் சபையில் விரைவில் ஒப்புதல் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்புப்படைகளின் தலைமையகமான பென்டகனின் நிலைத்தன்மையை மீட்டெடுக்க பிடென் ஆஸ்டினைத் தேர்ந்தெடுத்துள்ளார். முன்னர் டிரம்ப் ஆட்சியில் இரண்டு செனட் உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பு செயலாளர்கள் மற்றும் இடைக்கால அடிப்படையில் பதவியை வகித்த நான்கு பேர் என பலரைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பென்டகனுக்குச் செல்வதற்கு முன், ஆஸ்டின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், அவர் முதல் கருப்பு பாதுகாப்பு செயலாளராக இருப்பதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் பென்டகனின் நுழைவாயிலுக்கு வந்தார்.
அங்கு அவரை புதன்கிழமை முதல் செயல் செயலாளராக இருந்த துணை பாதுகாப்பு செயலாளர் டேவிட் நோர்கிஸ்ட் மற்றும் கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான இராணுவ ஜெனரல் மார்க் மில்லி ஆகியோர் வரவேற்றனர். அவர் அங்கு பதவியேற்றுக்கொண்ட நிலையில், முதலாவதாக கொரோனா நெருக்கடி குறித்து மூத்த சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதையடுத்து நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்குடன் தொலைபேசியில் பேசவும், சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைப் பற்றிய விளக்கங்களைப் பெறவும் அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.